headlines

img

முகமூடிக்குள் முசோலினிகள் - நவகவி

முகமூடியுடன் வருகிறார்கள்
முசோலினிகள்.

தேசியக் கொடியின் சக்கரம் அகற்றி
சுவஸ்திக் சின்னம் பதிக்க....

பல்கலை பயிலும் இடங்களை
பல்கொலை நிகழும் இடங்கள் ஆக்க..
கல்வி வயல்களில்
களைகளை விவசாயம் செய்ய...
கொலைவேந்தர்களை
துணைவேந்தர்கள் ஆக்க...
மாணவர்களின்
மண்டை ஓட்டைக் கழற்றி
கமண்டல ஓட்டைப் பொருத்த....

சுதந்திரச் சுடரை
கொள்ளிக்கட்டை ஆக்கி
தேசத் தாயை சிதையேற்ற.....
தேச எல்லை நெடுகிலும்
திரிசூல வேலிநட்டு
மாபெரிய தேசம் இதை
மரணமுகாம் ஆக்க....

முகமூடியுடன் வருகிறார்கள்
முசோலினிகள்.

இவர்களுக்கு முகமூடி எதற்கு?
இவர்கள் முகமே முகமூடி தான்.
அகந்தை அகத்தை மறைக்கும்
அயோக்கிய முகமூடி .... அந்த
முகமூடிக்கே முகமூடியா ?

பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்த
புராதன தேசம் இது... எனவே
தேசத்தையே பூஜ்ஜியமாக்கும்
திட்டத்துடன் வருகிறார்கள்.

காவி நிறத்தை தங்கள் நிறமாய்
கவனமாய்த்தான் தேர்வு செய்துள்ளனர். 
கல்விக் கூடங்களை
கசாப்புக் கூடங்கள் ஆக்கும் போது
தெறிக்கும் ரத்தம் தெரியாதிருக்க
காவி பூசி அதை
கன ஜோராய் மறைக்கலாம் அல்லவா?

பல்காவி ஏறிய 
பாமர இந்தியரின்
சொல்காவி ஏற
மனம் காவி ஏற
மார்க்கம் சொல்லி வருகிறார்கள்.

அண்ணல் காந்தி ஊன்றுகோலை
அடுப்பு விறகாக்கி விட்டு
ஆர்.எஸ்.எஸ்.லட்டியை
தேசத்தின் செங்கோல் (!) ஆக்கும்
திட்டமுடன் வருகிறார்கள்.

பகத்சிங்குகளை உருவாக்கும்
பல்கலைக் கழகங்களை
கோட்சேக்களை உருவாக்கும்
குருகுலங்கள் ஆக்கிடும்
குறிக்கோளுடன் வருகிறார்கள்.

ரத்தத்தில் நிறபேதம் பார்க்கவும்
மயிர்பிளந்து மதபேதம் பார்க்கவும் பூதக்கண்ணாடியுடன்
புறப்பட்டு வருகிறார்கள்.

ஆனால்.... ஆனால்....
பழைய இந்தியா அல்ல
இளைய இந்தியா!

செவிகளில் காய்ச்சி ஊற்றிய ஈயம்
கெட்டிப் பட்டு அங்கேயே
கிடக்க வில்லை இப்போது!
வானக் கனவு காணும்
ஞானச் சிரசுகளின் உஷ்ணத்தால்
இளகி வெளியேறுகிறது
இறுகிக் கிடந்த ஈயம்!

வாலிப இந்தியாவின்
வண்ணக் கனவுகள்
ஏழ்வண்ண வானவில்லாய் இருப்பதால்
காவிச் சாயத்தை அது
கறையாய் கருதுகிறது... மேலும்
தன் மேல் காறி உமிழ்ந்த
வெற்றிலைச் சாயமாய் காவியை
வெறுக்கின்றன எமது
பழசுபடாத இளசுகள் !.... அந்த
படை நடைப் பாட்டு முரசுகள்!

கரம் உடைந்தாலும்.... நெஞ்சின்
உரம் உடையாமல்
ரத்தம் சிதறினாலும்.... தமது
சித்தம் சிதறாமல் .....
கணுக்கால் சிதைந்தாலும்...நாட்டின்
கடைக்கால் சிதைவதை
காணச் சகிக்காமல்.....

ஆணவம் அழிக்கும் மாணவச்சேனை
ஆர்ப்பரித்து வருகிறது.
முகமூடி மட்டுமா?... பாசிசத்தின்
முகம் கிழிக்க வருகிறது!

துணி போட்டு மூடினாலும்
பிணத்தின்
துர்நாற்றம் மறையாது.
எதைப் போட்டு மூடினாலும்
பாசிசத்தின்
இழிதகைமை மறையாது... எனவே
இளைய இந்தியா 
இழிவகற்ற எழுகிறது!

பாருங்கள் இப்போது
படிப்பறை பாசறை ஆகிறது!
புத்தகம் மட்டுமல்ல
போராட்ட  வீதியின் புழுதியிலும்
வித்தகம் இருப்பதை
விதந்தோத வருகிறது
பகத்சிங்கின் இந்தியா
பகை மோத வருகிறது.

குரு சொல்வதை மட்டுமா?
தேசத்தின்
தெரு சொல்வதையும்
செவிமடுக்க வருகிறது
திருப்பூர்க் குமரனின்
தியாக வாரிசு!

குன்றுகளை -கொள்கைக் குன்றுகளை -
குண்டாந்தடிகள் நொறுக்குமோ?
இலட்சியத்தின் கூர்முனையை
திரிசூல மும்முனை ஜெயிக்குமோ?

கயமைக்கு எப்போதும்
நிமிர்ந்த நெஞ்சு மட்டுமா?
முதுகும் இருப்பதில்லை!
புறமுதுகு மட்டுமே உண்டு!
தோற்றோட.... பயந்தோட....!

முகத்தில் மூடிக்குப் பதில்
நெஞ்சில் கவசத்துக்குப் பதில்
முதுகில் கவசம் பூட்டி
தற்காத்துக் கொள்ளலாம்
சங்கி நாசிசம்!... ஆனால்
இந்திய நாசிசத்துக் கெதிராய்
நாற்திசையிலும் அதோ
நவ இந்தியா! இளம் இந்தியா!

பயந்து மறைய ஹிட்லருக்கு
பாதாள அறையாவது இருந்தது.
அதுபோல் நாசிசம் இங்கே
அறை கட்டவும்
அவகாசம் தராமல்
வெகுண்டெழுகிறது வீர இந்தியா!

பல்கலைக்கழகங்களில்
நூல் பயிற்சி செய்வதோடு
தத்துவ
வேல் பயிற்சி செய்கிறது
வீர இந்தியா!
விவேக இந்தியா!
தீர இந்தியா!!
தியாக இந்தியா!

;